திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி, திருவாணைக்காவல் பகுதியில் உள்ள நடுக்கொண்டையம்பேட்டை, மல்லிகைபுரத்தில் வசிப்பவர் ரவீந்திரன். லாரி தொழில் செய்து வரும் இவரது சகோதரர் மனோகரன் (வயது65).
இவர் வழக்கம் போல வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு டூவீலரில் வந்த 2 கொள்ளையர்கள் மனோகரனை அடித்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். மனோகரன் அவரை பிடிக்க சென்றபோது லாரியில் தள்ளியதால் காயமடைந்த மனோகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று மனோகரன் உயிரிழந்தார்.
இந்த கொள்ளை, கொலை பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.. ஏற்கனவே இந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் கல்லை கட்டி டயர்களை திருடிச் சென்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த பகுதியில் சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.