திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏராளமான வணிகர்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு உணவு பாதுகாப்பு துறையின் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இந்த முகாமில் வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 295 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை முகாம் அமைப்பாளர் டாக்டர் ஹக்கீம் செய்து இருந்தார்.