திருச்சியில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் பேச்சுப் போட்டி பரிசளிப்பு
திருச்சியில் நடந்த பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாரதியார் நுாற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு, பா.ஜ.க. சார்பில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி திருச்சி இந்திராகாந்தி கல்லுாரியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாநிலச் செயலாளர் மலர்க்கொடி தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.ராமசுப்பு, பாலாஜி சிவராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர்.
இதில் எச்.ராஜா பேசுகையில், தமிழகத்தை, தமிழ்நாடு என்றும், தமிழ் மொழியை செந்தமிழ் என்றும் முதலில் பாடியவர் பாரதியார் தான். தேசியத்தையும், தெய்வத்தையும், தேசத்தையும் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடாமல், ஒரு தேசியக்கவிஞன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் பாரதியார். தமிழ் மீது தீராத பற்று கொண்ட அவர், பிறமொழிகள் மீதும் பற்றுக் கொண்டிருந்தார்.
தமிழ் மொழியை சிறப்பிக்க காசி இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறைவேற்றுவார். ஆனால், தமிழகத்தில் காளிதாசர் பெயரில் சமஸ்கிருத மொழிக்கு இருக்கை அமைக்கப்படும் என அறிவிக்க முடியாது. அப்படியே அறிவித்தால், தேச விரோத, பிரிவினை வாத சக்திகளிடமிருந்து கூக்குரல் எழும்பும். தேசிய ஒருமைப்பாட்டையும், தேசியத்தையும் நேசிப்பவர்கள் பாரதியாரையும், தமிழ் மொழியையும் நேசிக்கின்றனர் என்றார்.
.இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி கார்வேந்தன், மாநில துணைத்தலைவர் புரட்சி கவிதாசன், பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு மாநில பார்வையாளர் ஜெயராமன், மகளிரணி மாநில செயலாளர் பிரமிளா, துணைத்தலைவர் பார்வதி உள்ளிட்ட பா.ஜ.க .நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.