திருச்சியில் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
திருச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு அடுத்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது.
இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு இன்று முதல் கல்லூரிக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியுள்ளது. அந்தவகையில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு இன்று காலை வகுப்புகள் தொடங்கியது.
மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு சானிடைசரால் கை கழுவி , உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகு அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கல்லூரியில் அவர்களுக்கான வகுப்புகளுக்கு செல்ல அனுமதித்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கல்லூரி முதலாம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் மாணவிகள் மிகவும் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.