திருச்சியில் வெளியில் வந்தால் ரூ 5000, வெறிச்சோடிய மாநகரம்

திருச்சி மாநகரம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் - 200 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் மாநகரம் வெறிச்சோடியது.

Update: 2021-04-25 08:00 GMT

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இரண்டாவது அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் சுமார் 236 நாட்களுக்கு பிறகு தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகரைப் பொருத்தவரை மொத்தம் 22 இடங்களில் ஒரு கூடுதல் துணை ஆணையர், 2 உதவி ஆணையர், 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 400-க்கு மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்

முழு ஊரடங்கு சிறப்பு வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அனுமதியின்றி சுற்றித்திரியும் நபர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருச்சி மேலப்புதூர் அருகே முகக் கவசங்கள் அணியாதவர் மீதும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் வருபவர்கள் மீதும் ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசாணையில் குறிப்பிட்டது போல் பால், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை மையம், மருந்தகங்கள், மருத்துவ அவசர உதவி வாகனம், சரக்கு வாகனங்கள், விவசாய விளைப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் கொண்டு செல்லும் வாகனங்கள் இயங்க தடையில்லை.

மேலும் வழக்கம் போல் இரவு ரோந்து பணியில் உதவி ஆணையர் தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் மாநகரின் நுழைவு பகுதிகளில் உள்ள 8 சோதனைச்சாவடிகள், 14 ரோந்து வாகனங்கள் மற்றும் 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுப்பப்படுத்தப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் மிகுந்த சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் பேருந்து நிலையம், பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, மேலப்புதூர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களும் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனாலும் மருந்தகங்கள், மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்பட்டது.

Tags:    

Similar News