லாரியில் ஆண் சடலம் - திருச்சியில் பரபரப்பு
ஆண் சடலம் எலும்புக்கூடாக லாரியில் கவனிப்பாரற்று இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை ஆவின் பூத் எதிரே காலி மனை உள்ளது. கணபதி சர்வீசுக்கு சொந்தமான பழுதடைந்த லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் காலி மனையில் மழைநீர் தேங்கி லாரி பாதி அளவிற்கு மேல் மூழ்கி வெளியே எடுக்க முடியாத படி சேற்றில் சிக்கிக் கொண்டு இருந்துள்ளது. ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது தண்ணீர் வடிந்து லாரியை பழுது பார்ப்பதற்காக இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியை வெளியே எடுத்து பார்த்த பொழுது. டிரைவர் இருக்கையின் அருகே அடையாளம் தெரியாத ஒரு ஆணின் எலும்புக்கூடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடம் வந்த போலீசார் எலும்பு கூட்டை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத இந்த ஆணின் எலும்புக்கூடு யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.