திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்.
திருச்சி மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் - 11 லட்சத்து 33,020, பெண்கள்- 11 லட்சத்து 99,635, மூன்றாம் பாலினம் - 231 என மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது 80,095 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 7,648 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். கூடுதலாக 72,447 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2021 ஆம் ஆண்டு 18 - 19 வயது நிரம்பிய 35,889 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 274 இரட்டை பதிவு நீக்கப்பட்டு உள்ளது.
புதிய வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும், குழப்பங்களும் நீடிப்பதாகவும், பூத் பிரிப்பதில் சிக்கல்கள் இருப்பதை தீர்த்து தரக் கோரியும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கையில் இதுகுறித்து டெல்லியில் தான் பேச வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு திமுகவினர் திருச்சி மாவட்டத்திற்கு தாங்கள் தான் தேர்தல் நடத்தும் அதிகாரி என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு நிலவியது.