கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை- அபராதம்
கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி பொன்மலையில் நடந்த கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி பொன்மலை ராஜீவ் காந்தி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வீராசாமி .இவர் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். அந்த வீட்டில் சங்கர் மீனா என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிப்பவர்கள் சுரேஷ் என்கிற செபாஸ்டின் பிரகாஷ் (வயது 35 )விஜய் என்கிற ஆரோக்கியவிஜய் (20) அஜித்குமார் (வயது 19 )இதில் ஆரோக்கிய விஜய்யும் அஜித் குமாரும் அண்ணன் தம்பிகள் ஆவார்கள்.
சங்கர் மீனாவிடம் சுரேஷ் தகராறு செய்துள்ளார். இதனை வீராசாமி தட்டி கேட்டார் ஏன் எனது வீட்டில் வாடகை இருக்கும் பெண்ணிடம் தகராறு செய்கிறாய் என்று. இதனால் வீராசாமிக்கும் சுரேஷ் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 7 -10 -2019 அன்று வீராசாமி தனது வீட்டு முன் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆயுத பூஜை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சுரேஷ் என்கிற செபாஸ்டின் பிரகாஷ் மற்றும் விஜய் என்கிற ஆரோக்கிய விஜய், அஜித்குமார் ஆகியோர் வீராசாமியிடம் என்னடா பூஜை போடுகிறாய் என்று கேட்டு தகராறு செய்தனர். பின்னர் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அடித்து நொறுக்கினார்கள். இதை தடுக்க வந்த வீராசாமி மற்றும் அவரது மகன் கோபால் சாமியை அரிவாளால் வெட்டினார்கள். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் கோபால் சாமி உயிர் பிழைத்தார்.
இது தொடர்பாக பொன்மலை போலீசார் மூன்று பேரையும் கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சந்திரா, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் என்கிற செபாஸ்டின் பிரகாசுக்கு மூன்று வருடம் சிறை தண்டனை மற்றும் 3500 ரூபாய் அபராதமும், விஜய் என்கிற ஆரோக்கியவிஜய்க்கு ரூ.3000 அபராதம் மற்றும் அஜித்குமாருக்கு ரூ.9500 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ். ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.