மாணவர்களுக்கு தேர்வு கால மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி வகுப்பு

திருச்சியில் மாணவர்களுக்கு தேர்வு கால மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.;

Update: 2023-03-27 16:28 GMT
மாணவர்களுக்கு மன அழுத்தம் தவிர்ப்பது பற்றி யோகா ஆசிரியர் விஜயகுமார் பயிற்சி வகுப்பு நடத்தினார்.

திருச்சியில் மாணவர்களுக்கு மன அழுத்தம் தவிர்ப்பது பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது பிளஸ்2 அரசு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வும் விரைவில் தொடங்க இருக்கிறது. என்ன தான் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகள் என்றாலும் தேர்வு என்றால் ஒரு வித பயம் இருக்க தான் செய்யும். சாதாரண நிலையில் உள்ள மாணவர்களுக்கு பரீட்சையில் தேர்ச்சி பெற்றாக வேண்டுமே என்ற நெருக்கடி இருக்கிறது என்றால் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கோ அதிக மதிப்பெண் பெறவேண்டுமே என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு மன அழுத்தத்தை கொடுக்கும். இப்படி ஒவ்வொருமாணவருக்கும் வெவ்வேறு விதமான மனு அழுத்தம் இருக்கும். இந்த மன அழுத்தத்தை போக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

அந்த வகையில் தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி குறித்த சிறப்பு பயிற்சி திருச்சி தென்னூர் நடுநிலை பள்ளியில் இன்று நடைபெற்றது.


பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்வுக் காலத்தில் மன அழுத்தமும் பதட்டமும் பொதுவான உணர்வுகளாக இருந்தாலும், அவற்றை யோகா தியான பயிற்சி மூலம் மனதை ஒருமுகப்படுத்தலாம். தேர்வு பருவத்தில் , பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் போராடுகிறார்கள் . இது மாணவர்களின் படிப்பிலும் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேர்வு காலங்களில் மன அழுத்தமும் பதட்டமும் பொதுவான உணர்வுகளாக இருந்தாலும், அவை அதிகமாக இருப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

வழக்கமான உறக்க நேரத்திற்கு இடையூறு ஏற்படும் போது மன அழுத்தம் அதிகரிக்கும். இரவு நேர உறக்கம் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.சமச்சீரான உடற்பயிற்சியுடன், சரிவிகித உணவை உட்கொள்வது உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான திறவுகோலாகும். சமச்சீர் உணவில் அனைத்து வகையான உணவுகளும் அடங்கும், குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பருப்புகள் மற்றும் விதைகள் ஆகும். வாரத்தின் ஏழு நாட்களுக்கு ஏழு விதமான தானியங்கள், ஏழு விதமான காய்கறிகள், ஏழு விதமான பழங்கள், ஏழு விதமான கீரை வகைகளை உட்கொள்வது சிறந்த வழிமுறையாகும்.

மன அழுத்தத்தைத் தணிக்க மற்றொரு நல்ல வழி காலை அல்லது மாலையில் ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.உடல் அளவிலும் உள அளவிலும் புத்துணர்ச்சி பெற மனப்பூர்வமாக முயற்சி செய்து, மன அழுத்தத்தைத் தணிக்க சிறிது நேரம் யோகா, தியான பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் படிக்கச் செல்லும்போது, ​​நிதானமாகவும், தெளிவாகவும் உணர தியானம் உதவும்.

உடற்பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன மற்றும் தசை தளர்வுக்கு உதவுகின்றன. மன அமைதிக்கு இசையைக் கேட்கலாம்.கற்றல் நுட்பங்களையும் மேற்கொண்டால் படிக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக்கி விடலாம். இவை நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார். துவக்கத்தில் பள்ளி ஆசிரியர் லாரன்ஸ் அமலின் வரவேற்றார். இறுதியாக  சவுரி ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News