திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உலக புத்தக தின விழா
திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உலக புத்தக தின விழா நடந்தது.;
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் டி.தியாகராஜன் தலைமையில் , மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், முன்னிலையில் உலக புத்தக தினவிழா நடந்தது. மக்கள் சக்தி இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் .
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் டி தியாகராஐன் பேசுகையில் ஒரு புத்தகம் நுாறு நண்பர்களுக்கு சமம் என்று சொல்லலாம். புத்தகங்களை வாசிப்பது அறிவை பெருக்குகிறது.எழுத்துத்திறனை மேம்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல பொழுது போக்காகவும் இருக்கிறது.விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் போல் சமூகம், தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துக்களை புத்தகங்கள் தன்னுள் புதைத்து வைத்துள்ளன. வரலாற்று நிகழ்வுகளையும், இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல பதிவு செய்யப்பட்ட பொக்கிஷங்களே புத்தகங்கள். வாசிப்பை சுவாசமாக கருதி நேசிப்போம்.உலக புத்தக தினத்தில்புத்தகம் படிப்பதை ஊக்குவிப்போம் என்றார்.
மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ: சமீப கால ஆராய்ச்சிகள் ,புத்தகம் வாசிப்பதால் ஒருவருடைய மன அமைதி, ஒருமைப்பாடு, யோசிக்கும் திறன், படைப்பாற்றல், பகுத்தறிதல் , மொழித்திறன் மேம்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. தினமும் 30 நிமிடங்கள் வாசிப்பது என்பது ஒருவருடைய வாழ்நாளை கூட்டுகிறது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். புத்தகங்கள் வாசிப்பதால் ஒருவருடைய கற்பனைத்திறன் மேம்படுகிறது. உலகில் புகழ்பெற்ற அனைவருமே புத்தகங்களை நண்பர்களாக பாவித்தவர்களே. ஞாபகசக்தி அதிகரிக்கும் என்றும் , மேலும் 2022ஆம் ஆண்டுக்கான உலக புத்தக நாளுக்கு "வாசியுங்கள் நீங்கள் தனியாக இருப்பதாக உணரமாட்டீர்கள்" என்ற கருபொருள் உள்ளது. அத்துடன் இந்த நாளில், அனைத்து விதமான பின்னணியுடன் கூடிய குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் வளர்த்துக்கொள்ளும் வேண்டும் என்ற நோக்கத்துக்காக மக்கள் சக்தி இயக்கம் கொண்டாடுகிறது என்றார்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வினோதினி நன்றி கூறினார். ஆசிரியர்கள் அருணா, சந்திரா தேவி, ஜெயந்தி, ரீனா , மரினா, ராணி , நர்மதா, மகேஸ்வரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .