பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு திருச்சி கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-10-06 09:15 GMT

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சின்னவேலகா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தேஜாஸ்ரீ ( வயது 7 ). இவர் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3–ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் . கடந்த 2017–ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதியன்று வீட்டில் இருந்து வேனில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார் . அப்போது முசிறி காமாட்சிப்பட்டி ரோடு அருகே வந்த போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது . இந்த விபத்தில் தேஜாஸ்ரீ படுகாயமடைந்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அப்போது முசிறியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜெயசித்ரா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார் . இது தொடர்பான  வழக்கு திருச்சி முதலாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா நேரில் ஆஜராகி சாட்சி அளிப்பதற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர்  கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதனை தொடர்ந்து  நீதிபதி வேதியப்பன் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிற்கு  பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார் . தற்போது ஜெயசித்ரா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News