மோசடி செய்த காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் புகார்

திருச்சியில் மோசடியில் ஈடுபட்ட காதல் கணவன் நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்ய வந்தார்.

Update: 2021-12-21 03:42 GMT

காதல் கணவன் மீது மோசடி புகார் அளித்த இளம் பெண் சுவாதி.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த இளம்பெண் சுவாதி தனது தாயாருடன் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது

நான் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டுஅதே பகுதியை சேர்ந்த தனியார் கார் ஓட்டுனரான பிரேம்குமார் (வயது 25) என்பவரை கடந்த 2019-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பதற்காக எனது தாயாரிடம் பிரேம்குமார்  ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி கார் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு யாரிடமும் சொல்லாமல் காரை விற்று விட்டு அதன் மூலம் வந்த பணத்தை செலவழித்து விட்டதில்  பிரேம்குமாருக்கும் எனக்கும் இடையே சண்டை பிரச்சினை ஏற்பட்டது.

இது குறித்து எனது தாயார் ஜீவிதா பிரேம்குமாரிடம் கடன் பணத்தை கேட்டதற்கு, வெளியூர் சென்று சம்பாதித்து கடனை அடைப்பதாக கூறி விட்டு வெளியே சென்ற பிரேம்குமார் கடந்த 6 மாதமாக வீட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது பெங்களூரில் வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு என்னையும் (சுவாதி) எனது தாயாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தாயாருடன் மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

Tags:    

Similar News