திருச்சியில் கணவர் இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் கணவர் இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெரியார் நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி கீதா (வயது 47). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் இல்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கீதா, கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவகுமார் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து கீதாவின் அண்ணன் குணசீலன், அவரை திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து பராமரித்து வந்தார்.
சொந்த வேலையாக வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் தனது தங்கையை திருச்சி உறையூரில் உள்ள நண்பர் வீட்டில் தங்க வைத்துவிட்டு சென்றிருந்தார். நோய் கொடுமை ஒருபுறம், கணவர் இறந்த துக்கம் மறுபுறம், குழந்தை இல்லாத ஏக்கம் வேறு கீதாவை வாட்டி வதைத்தது.
மேலும் அண்ணனுக்கு பாரமாக இருக்கிறோமே என்று கீதா கருதியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.