திருச்சியில் உலக முதியோர் தின நிகழ்வில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்சியில் நடைபெற்ற உலக முதியோர் தின நிகழ்வில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-10-01 10:57 GMT

திருச்சியில் நடந்த உலக முதியோர் தின நிகழ்வில் வயதானவர்களுக்கு பாய் மற்றும் அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு என்பது கட்டாயமான ஒன்று தான். பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவர் பரம்பொருள் இறைவன் மட்டுமே. அந்த இறைவன் எப்படி இருப்பார்? அவருக்கு உருவம் உண்டா? அல்லது காற்று போல் அரூபமாக இருப்பாரா? என்பதற்கு எல்லாம் எந்த மதத்தினராலும் விடை சொல்ல முடியாது.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட நமது வாழ்வியல் காலத்தில் குழந்தை பருவம், பாலப்பரும், வாலிப பருவம், முதுமைப்பருவம் என மனித வாழ்வை நான்காக பிரிக்கலாம். இதில் முதுமைப்பருவம் தான் கொடுமையான கால கட்டமாகும். ஏனென்றால் குழந்தை மற்றும் பாலப்பருவத்தில் நம்மை பாலூட்டி சோறூட்டி சீராட்டி வளர்த்த தாய் தந்தையர் உள்பட யாரும் நாம் முதுமை அடையும்போது அவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள்.


அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகளும் அவரவர் குடும்பத்தை பார்க்க போய்விடுவார்கள். நாம் கண்ணும் கருத்துமாக வளர்த்த நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நம்முடன்இருப்பார்களா? என்பதை உறுதியாக சொல்லமுடியாது. வேலை காரணமாக அவர்கள் உள்நாட்டின் எந்த ஒரு மூலையிலோ அல்லது வெளிநாட்டிலோ கூட இருக்கலாம். எனவே முதுமைப்பருவத்தை பெரும்பாலும் நாம் தனித்தே தான் அனுபவிக்க கூடிய சூழல் தான் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது.

அதனால் தான் அக்டோபர் 1 உலக முதியோர் தினமாக உலகம் முழுவம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தில் தாய் வீடு உதவும் கரங்கள் சேவை மையம் சார்பில் ஆதரவற்ற ஏழ்மையில் உள்ள முதியவர்களான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கதர் சால்வை அணிவித்து மரியாதை செய்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் பாய் போர்வை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .


  • இந்நிகழ்வில் ரோட்டரி சங்க பிரமுகர்கள் சரவணகுமார், அழகேசன் தாய் வீடு உதவும் கரங்கள் சேவை மையத்தின் ஆலோசகர்கள் சுந்தரேசன், மாலினி, நிர்வாகிகள் புவனேஸ்வரி அரவிந்தன், மணிவேல், சர்மிளா மற்றும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதியவர்களுக்கு மரியாதை செய்து அவர்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலரும் தாய் வீடு உதவும் கரங்கள் சேவை மையத்தின் நிர்வாகியுமான தாய் வீடு சிவக்குமார் அ தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News