தண்ணீர் தொட்டி இங்கே, தண்ணீர் எங்கே? மக்களின் தாகம் தீருவது எப்போது?

திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பவேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்து உள்ளார்.

Update: 2021-10-08 05:30 GMT

திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி

திருச்சி சமூக ஆர்வலரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட பொருளாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வனத்தில் வாழும் விலங்குகளுக்கு கூட கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்க தண்ணீர் தொட்டி அமைத்து தாகம் தீர்ப்பதை கேள்விபட்டுள்ளோம். ஆனால் மக்கள் வரி பணத்தில் மக்கள் பயன்பட குடிநீர் தொட்டி வைத்ததோடு சரி. அதில் தண்ணீர் நிரப்பியதாக நான் கேள்விபட்டதோ, பார்த்தது கூட இல்லை.

இது எங்கோ..? நீலகிரி மாவட்டம், மசினகுடி காட்டு பகுதியில் இருபது பர்லாங் அப்பால் இல்லை. திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தான் இந்த கொடுமை.


திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 முன்பாகவும், கூடுதல் மகிளா நீதிமன்றம் முன்பாகவும், பழைய தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பாக திருச்சி மாநகராட்சி சார்பில் மூன்று சின்டெக்ஸ் டேங்க் அமைத்து. அதில் டைல்ஸ் எல்லாம் ஒட்டி நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

ஆனால் மேற்படி குடிநீர் தொட்டி வைத்த நாள் முதல் மேற்படி குடிநீர் தொட்டியில் நீர் நிரப்பியதாக வரலாறு இல்லை. மேலும் ஒரு சில சிமென்ட் குடிநீர் தொட்டியும் நிலையும் இதுதான்.

மேலும் மேற்படி குடிநீர் தொட்டி ஏற்படுத்தபட்டதற்கான நோக்கம் நிறைவேறாமல் உள்ளது உள்ளபடியே வேதனையளிக்கிறது. இதற்கு முன்பு திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் இல்லை.

மேலும் திருச்சி நீதிமன்ற வளாகம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது என்பது குறிப்பிடதக்கது. திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தான் உள்ளாட்சி துறைக்கு அமைச்சரும் கூட.

எனவே உள்ளாட்சித்துறை துறை அமைச்சர் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாக திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குடிநீர் தொட்டிகளில் வாரம்தோறும் தொடர்ந்து நீர்நிரப்புவதை உறுதி செய்து நீதி வேண்டி வரும் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க கேட்டுகொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News