திருச்சியில் குடிநீர் குழாய் உடைப்பு: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
திருச்சியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பினால் வெளியேறிய தண்ணீர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
திருச்சி மாநகராட்சி 61 வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். இங்கு சுமார் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து ஜே.கே. நகர், ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி, லூர்துநகர், ஆர். வி .எஸ் .நகர் ,ஆர். எஸ். புரம், காந்திநகர், முகமது நகர், திருமுருகன் நகர், கொட்டப்பட்டு இந்திரா நகர் ஆகிய பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதிக்கு பாலாறு தெரு வழியாக செல்லும் மெயின் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. மெயின் குழாய் என்பதால் அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அந்த சாலை முழுவதும் பரவியது. இதனால் அந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் கூட பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தண்ணீர் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருந்ததால் அந்த சாலை ஓரம் உள்ள வீடுகளின் முன் புறமும், பின்புறமும் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இப்படி தேங்கிய தண்ணீர் சில வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
குறிப்பாக மதில் சுவரையும் தாண்டி கசிவின் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். ஏற்கனவே மழை நீரால் அவதிப்பட்டு வரும் ஜே.கே. நகர் மக்களுக்கு குடிநீர் குழாய் உடைப்பினால் ஏற்பட்ட இடையூறு மேலும் அவதியைஏற்படுத்தியுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி குழாய் உடைப்பினை சீரமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.