தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் திருச்சியில் பேட்டி

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2021-10-11 14:30 GMT

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியிலுள்ள விவிட் ஓட்டலில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களுக்கு  கட்சியின் நிறுவன தலைவர்  வேல்முருகன் பேட்டிஅளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதில் வேளாண் சட்டங்களும் ஒன்று. அந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரபிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அமித் மிஷ்ராவின் மகன் கார் ஏற்றி கொலை செய்தார். அதற்கு பொறுப்பேற்று இணை அமைச்சர் பதவி விலக வேண்டும்.

வனப்பாதுக்காப்பு சட்டம் என்கிற பெயரில் வனங்களையும், அதே போல கடல் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதை அவர்கள் செய்யக் கூடாது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏற்புடையதல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஏழு பேர்களில் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் ரவிச்சந்திரனுக்கு பரோலை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வேளாண் கல்லூரியில் சேரும் ஆர்வம் மாணவர்களுக்கு தற்போது அதிகரித்து வருகிறது. எனவே விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் வேளாண் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் நன்கொடை ரூ.10 லட்சம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது. அது போன்று புகார் வந்தால் அந்த கல்லூரிகளின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். கோவை வேளாண் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக இருக்கும் என்னிடமும் மாணவர்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உயிரை பணயம் வைத்து கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் செவிலியர்கள் பணியாற்றினர் .அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு, சிறு குற்றங்கள் செய்து விடுதலை செய்யப்பட்டவர்கள் பலர் காவலர் பணியிடங்களுக்கு தேர்வாகி உள்ளனர். ஆனால் சிறு, சிறு வழக்குகளை காரணம் காட்டி அவர்களை பணியமர்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் மறுக்கின்றனர். தற்போது 700 பேர் அது போன்று காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அரசு சிறப்பு ஆணையம் அமைத்து அவர்களை பணியமர்த்த வேண்டும்.

ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழு தமிழர் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் கட்சி உட்பட யாரும் பேச வேண்டாம்.

வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை தடுக்க வேண்டாம். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்தரம் செய்யாமல் இருங்கள் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார். அதே கோரிக்கையை நானும் வைக்கிறேன்.

வேளாண் சட்டங்கள் குறித்து புரியாமல் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். நான் முந்திரி, வாழை உள்ளிட்டவற்றை விவசாயம் செய்யும் விவசாயி. நான் அந்த சட்டங்களை வரிக்கு வரி படித்துள்ளேன். அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எப்படி எதிரானது என்பது தெரியும். வேளாண் சட்டங்கள் குறித்து அண்ணாமலையுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்னால் என்.எல்.சி நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அங்கு நிலக்கரி எடுக்க நிலங்களை தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க என்.எல்.சி நிர்வாகம் தயாராக இல்லை. ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு வேலையும் வழங்கினால் மக்கள் நிலங்களை நிச்சயம் தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா, இளைஞரணி செயலாளர் பாரத், மாவட்ட தலைவர் முரளி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News