நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி திருச்சியில் தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக திருச்சியில் தேர்தல் ஆணையர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-10-27 12:29 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் திருச்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் மகாலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆயத்தப் பணிகள் குறித்து மண்டல அளவில் விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியினையும் இன்று துவக்கி வைத்தார். திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் இவர்களுக்கான முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மாநில தேர்தல் ஆனையர் பழனிக்குமார் கூறியதாவது:-

எதிர்வரும் தேர்தலை சுமுகமாக, நியாயமாக, எளிதாக நடத்துவதுதான் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கம். அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுத்துள்ள பணிகளை நாம் சரியாக செய்ய வேண்டும். ஜனவரி 21-ஆம் தேதிக்குள் நமக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் நாம் எப்படி சிறப்பாக தேர்தலை நடத்தி முடிக்க போகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு காலம் குறைவாக தான் உள்ளது. எனவே எவ்வளவு சிறப்பாக, சரியாக பணிகளை முடிக்க வேண்டுமோ அதை பொறுப்புடன் செய்ய வேண்டும்.

பகுதி நீதி சார்ந்த பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட கலெக்டர்கள்  கவிதா ராமு (புதுக்கோட்டை), ரமண சரஸ்வதி (அரியலூர்), ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), டாக்டர் அருண்தம்புராஜ், (நாகப்பட்டினம்), தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்), காயத்ரி கிருஷ்ணன் (திருவாரூர்), லலிதா (மயிலாடுதுறை), மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் (திருச்சி), மாவட்ட கண்காணிப்பாளர்கள் பா.மூர்த்தி, (திருச்சி), நிஷாபார்த்திபன், (புதுக்கோட்டை), மணி, (பெரம்பலூர்), ஜவஹர் (நாகப்பட்டினம்), ரவளிப்ரியா கந்தபுணணி, (தஞ்சாவூர்), சுகுணாசிங்,(மயிலாடுதுறை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயகுமார் (அரியலூர்), அன்பழகன் (திருவாரூர்), மாநகராட்சி ஆணையர்கள் முஜிபுர் ரஹ்மான் (திருச்சி), க.சரவணகுமார் (தஞ்சாவூர்) உட்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News