திருச்சி உறையூர் நாச்சியார் கோயில் ராப்பத்து உற்சவத்தில் இன்று தீர்த்தவாரி
திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் ராப்பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று தாயார் தீர்த்தவாரி கண்டருளினார்.
108 திவ்யதேசங்களில் இரண்டாம் திவ்ய தேசமாக கருதப்படும் திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உப கோயிலாகும். ஸ்ரீரங்கம் கோயில் போலவே கமலவல்லி நாச்சியார் கோயிலிலும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் வைகுண்ட ஏகாாதசி பகல்பத்து உற்சவம் கடந்த 23-ம் தேதி துவங்கி 7-ந்தேதி நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் 28-ம் தேதி துவங்கியது.
ராப்பத்து உற்சவத்தின் போது தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக ஆஸ்தான மண்டபம் வந்தடைவார். அதேபோல ராப்பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து சொர்க்கவாசல் வழியாக ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். பின்னர் தாயாருக்கு மங்கள ஆர த்தி காண்பிக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பின் இரவு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு விழாவானது நாளை சாற்றுமறையுடன் நிறைவு பெறுகிறது.