கேட்பாரற்று கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள்
திருச்சியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர்கள் ரயில்வே போலீசாரிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.;
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று கேட்பாரற்று கிடந்த ஒரு பையை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் ரூ. 6 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்களான நடராஜ், முகமது காசிம் ஆகியோர் திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் கேட்பாரற்று கீழே கிடந்து எடுத்த பணத்தை ஒப்படைத்தனர்.
மேலும் பணத்துடன் கிடந்த அந்த பையில் இருந்த தகவலின் அடிப்படையில் உரிமையாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி உரிய நபர்களிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர்களின் நேர்மையை ரயில்வே போலீசார் பாராட்டினர்.