திருச்சியில் லாரி-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
லாரி-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர் காயம். பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்.
திருச்சி தாரநல்லூர் தெருவை சேர்ந்தவர் பாபு மகன் இப்ராஹீம்ஷா (வயது 26) இவரும் இவரது நண்பர் பர்மா காலனியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 19) என்பவரும் கல்லணையில் இருந்து திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், தஞ்சாவூர் மாவட்டம் கச்சமங்கலத்தை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் திருச்சியில் இருந்து கல்லணை நோக்கி சென்ற லயன்டேட்ஸ் பேரிச்சம் பழம் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் இப்ராம்ஷாவின் வலது காலில் பலத்த காயமடைந்தது. மேலும் பின்னால் அமர்ந்து வந்த பிரவீன்குமாரும் காயமடைந்தார். இதை தொடர்ந்து, காயமடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் லாரியை பின்தொடர்ந்து சென்ற காரும் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்தை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென திருவளர்ச்சோலை பனையபுரம் நடுவே அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் முழுவதும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் பாரதிதாசன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பேசி வேகத்தடை அமைக்கப்படும் என்று உறுதி கூறினார்.
இந்த மறியலால் திருவளர்ச்சோலை கல்லணை சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.