திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள்
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்து உள்ளனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய ௬ சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று உள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியதை தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.
முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் எல்லாம் அடுத்த வாரம் தான் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து செலவின பார்வையாளர்கள் இருவர் வந்து உள்ளனர்.
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் செலவின பார்வையாளராக மத்திய வருமான வரித்துறை அதிகாரி சரம்தீப் சின்கா வந்து உள்ளார். இவரது செல்போன் எண் 93639621119 .இன்னொரு அதிகாரியின் பெயர் முகேஷ்குமார் ப்ரம்ஹானே. இவரது செல்போன் எண் 9363985655 இவர் திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் செலவின பார்வையாளராக இருப்பார். இவர்கள் இருவரும் திருச்சி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கி உள்ளனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களை இவர்கள் இருவரிடமும் தெரிவிக்கலாம், மேலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலும் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.