திருச்சி உறையூர் பகுதியில் அடுத்தடுத்து இரு செயின் பறிப்பு சம்பவத்தால் பரபரப்பு
திருச்சியில் 2 பெண்ணிடம் பட்டப்பகலில் தாலி செயின் பறித்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.;
திருச்சி, உறையூர் லிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கீதா நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 43). இவர் தினமும் ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். அதே போல இன்று காலை தனது மொபட்டில் ராமலிங்க நகர் 5-ஆவது கிராஸ் வழியாக ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எஸ்.எஸ்.அப்பார்ட்மெண்ட்ஸ் அருகாமையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உமாமகேஸ்வரி அணிந்திருந்த 10பவுன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து உமா மகேஸ்வரி உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செயின்பறிப்பு சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில் கொள்ளையர்கள் வந்த வாகனத்தின் நம்பர் த.நா.51 டபிள்யூ.7154 என்று தெரிகிறது. இந்த மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதே போல குமரன் நகரைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி சுசீலா (வயது 50). இவரும் இன்று காலை மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் அடுத்த, அடுத்த இடங்களில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவத்தால் உறையூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.