திருச்சியில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது
திருச்சியில் அரசு உத்தரவை மீறி கள்ளச்சந்தையில் மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், அரசு அனுமதி பெற்ற பார்களும், ஏ.சி பார்களும் இன்று 17, நாளை 18, நாளை மறுநாள் 19 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந்தேதி ஆகிய நான்கு நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இந்த நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் இ.பி.ரோடு, பாபு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாபு ரோடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்ற குமார் (வயது 54) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் இருந்த சாக்கு பையில் 24 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் காவேரி ரோடு பகுதியில் குமரன் (வயது 35) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் 10 குவார்ட்டர் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 34 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.