பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரலில் திருப்புதல் தேர்வு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.;
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 69-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதல்வரின் 69-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள காசோலைகள், பள்ளிகளுக்கு தேவையான கணினிகளும் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மன நிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.
கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையி்ல், தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியுடன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சமது, என்.கோவிந்தராஜன், திருச்சி மாநகர துணை மேயர் திவ்யா தனகோடி, மலைக்கோட்டை பகுதி செயலாளர் மு.மதிவாணன், மாநகர் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.