திருச்சி டி.இ.எல்.சி. விவகாரம்: பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு

டி.இ.எல்.சி. சொத்துக்களை பராமரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-12-01 04:52 GMT

திருச்சி டிஇஎல்சி வளாகத்தில் இரு தரப்பினர்  இடையே ஏற்பட்ட மோதலால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திருச்சியில் டி.இ.எல்.சி.' என்று அழைக்கப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையானது மிகவும் பழமையான கிறிஸ்தவ சிறுபான்மை திருச்சபை ஆகும். இதில் 2½ லட்சம் கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைமையகம் திருச்சி மேலப்புதூரில் அமைந்துள்ளது.

இந்த திருச்சபைக்கு சொந்தமாக 124 தேவாலயங்கள், 18 பள்ளிகள், 2 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 6 கண் மருத்துவமனைகள், ஒரு பொது மருத்துவமனை, 25 குழந்தைகள் இல்லங்கள் உள்ளன. டி.இ.எல்.சி. பேராயராக டேனியல் ஜெயராஜ் செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தும் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டு பணிகளை தொடர்கிறார். இதற்கு கிறிஸ்தவ அமைப்பில் ஒரு பிரிவான டி.இ.எல்.சி. நல இயக்க தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கோர்ட்டு உத்தரவுப்படி, பேராயரை சபையை விட்டு வெளியேற சொல்லி உள்ளிருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் டி.இ.எல்.சி. நல இயக்க புதிய செயலாளராக மெஹர் ஆண்டனி பொறுப்பேற்றுக்கொண்டார்.

டி.இ.எல்.சி. சொத்துக்களை பராமரிப்பது தொடர்பாக அவர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டு வந்தது. அதன்படி, நேற்று முன்தினமும் மோதல் உருவானது. அதைத்தொடர்ந்து இருதரப்பிலும் பாலக்கரை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில், திருச்சி மேலப்புதூரை சேர்ந்த பேராயர் (பிஷப்) டேனியல் ஜெயராஜ், புதுக்கோட்டை மச்சுவாடியை  சேர்ந்த போதகர் சாமுவேல் ஆபிரகாம், மயிலாடுதுறை குஞ்சிதபாதம் நகரைச் சேர்ந்த போதகர் செல்லத்துரை, மதுரை கே.கே.சலால் புதூரை சேர்ந்த தங்கபாலம், விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த வில்பிரட் டேனியல், கோவை டி.இ.எல்.சி. தேவாலய வளாகத்தை சேர்ந்த பெஞ்சமின் ஜெயராஜ், திருச்சி மேலப்புதூர் தேவாலய பொருளாளர் ஆண்ட்ரூஸ் ரூபன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல மற்றொரு தரப்பில் டி.இ.எல்.சி. நல இயக்க செயலாளரான சென்னை அண்ணாநகரை சேர்ந்த மெஹர் ஆண்டனி, சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த டி.இ.எல்.சி. அருளானந்தர் தேவாலய போதகர் ஜேக்கப் சுந்தர்சிங், திருவள்ளூர் மாவட்டம் குப்பம்மாள் சத்திரம் கல்வந்தூர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் இன்பராஜ், திருச்சி மேலப்புதூர் டி.இ.எல்.சி. தலைமையகத்தை சேர்ந்த பாஸ்கரன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி பேராயராக தற்போதுள்ள டேனியல் ஜெயராஜ், மேலப்புதூரில் உள்ள டி.இ.எல்.சி. தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

Similar News