திருச்சி டி. ரத்தினவேல் மீண்டும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக தேர்வு
திருச்சி டி. ரத்தினவேல் மீண்டும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் கடந்த சில நாட்களாக மாவட்டம் வாரியாக நடைபெற்று வந்தது.இதில் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மாநில அளவிலான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த டி. ரத்தினவேல் (முன்னாள் எம்.பி) மீண்டும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் முதல் கட்சியின் பல்வேறு பதவிகளை வகித்து வரும் ரத்தினவேல் மீண்டும் தற்போது அமைப்புச் செயலாளராக தேர்வாகியுள்ளார்.
இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி அவைத் தலைவராக இருந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக 13 ஆண்டுகள் பதவி வகித்தார். 1991முதல் 1996 வரை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அ.தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்துள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார். பின்னர் மீண்டும் திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்தார்.
அ.தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார். கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள டி. ரத்தினவேல் மீண்டும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.