திருச்சி மலைக்கோட்டை கோயில் உச்சியில் கார்த்திகை மகா தீபம்
கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 19-ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.18 மணி அளவில் மலை உச்சியில் உள்ள கோபுரத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூர்வாங்க பூஜை செய்து, தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி நடைபெற்றது.
இதற்காக 600 மீட்டர் நீளமுள்ள பருத்தித் துணியால் பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டது. மேலே தூக்கி சென்று கயிறு கட்டி மேலே உள்ள கொப்பரையில் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதில் கார்த்திகை தீபதிருநாளான இன்று இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக இன்று மாலை 5.30 மணிக்கு மேல், தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடியில் எழுந்தருளினார்.
பின்னர் சுவாமிகள் அங்கு நின்றவாறு மலை உச்சியில் உள்ள கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நின்றார்கள். அதை தொடர்ந்து தீபாராதனை செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் வைத்து மாலை சரியாக 6.18 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியையும், தீபத்தையும் தரிசனம் செய்தனர். முன்னதாக இன்று மதியம் தாயுமான சுவாமி சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் இன்று ஏற்றப்பட்ட இந்த கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அணையாமல் எரியும். இந்த தீபத்தை மலைக்கோட்டை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.