திருச்சி தனியார் பஸ் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை

சாலை விபத்து வழக்கில் திருச்சி தனியார் பஸ் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-19 11:02 GMT

திருச்சி நீதிமன்றம் பைல் படம்.

திருச்சி புத்தூர் பாரதி நகர் நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 63). இவர் கடந்த 19 -2- 2017 அன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு தனியார் பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராமராஜ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இது தொடர்பாக திருச்சி வடக்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் தனியார் பேருந்தை இயக்கி ராமராஜ் உயிரிழப்புக்கு காரணமான பஸ் டிரைவர் மணிவேல்( வயது 69) என்பவரை கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து மணிவேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணி வேலிற்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். மணிவேல் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மங்களம் என்ற கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆவார்.

திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பஸ்கள் அதிவேகமாக சாலை விதிகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலே செல்வது உண்டு. இதன் காரணமாக அடிக்கடி உயிர்ப்பலி வாங்கும் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதுபோன்று உயிர்ப்பலி வாங்கும் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு கடுமையான சிறை தண்டனை அதாவது கொலை குற்றத்திற்கு நிகரான தண்டனை வழங்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல் சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. நீதி துறை இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News