தீபாவளியையொட்டி நாளை நடக்கிறது திருச்சி பொன்மலை வார சந்தை

திருச்சி பொன்மலை வார சந்தை தீபாவளியையொட்டி நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-11-10 14:55 GMT

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் திருச்சி பொன்மலை வார சந்தை நாளை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது/

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காந்தி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டதால் இந்த சந்தைக்கு காந்தி சந்தை என பெயர் வந்தது.

ஆனால் காந்தி சந்தை தொடங்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்திலேயே திருச்சி பொன்மலையில் ஒரு வார சந்தை தொடங்கப்பட்டது. அந்த வார சந்தை இன்று வரை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது என்பதுதான் அதன் சிறப்பு அம்சமாகும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி டவுன் பகுதிகளை விட பொன்மலை தான் முக்கியமான ஒரு நகரமாக இருந்து வந்துள்ளது. அதற்கு காரணம் மாவட்டத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களான நீதிபதிகள், கலெக்டர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் ஆகியோர் பொன்மலையில் தான் தங்கி இருந்துள்ளனர்.அதன் காரணமாக பொன்மலை சந்தை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழிகள், கிளி, மைனா, நாய், பூனை குட்டிகள்  உள்பட வீட்டு செல்லப்பிராணிகள்,  காய்கறிகள் விற்பனை செய்வதுடன் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வசதியும் உள்ளதாகும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கும் இந்த சந்தை இரவு வரை நடக்கும். திருச்சி நகரின் பல பகுதிகளில் உள்ளவர்கள் கூட இந்த சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் அதற்கு ஒரு நாள் முன்னதாக நாளை அதாவது சனிக்கிழமை பொன்மலை சந்தை நடைபெற இருப்பதாக சந்தை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News