திருச்சி போலீஸ் டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
திருச்சி நில அபகரிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், காவல்துறை துணை கண்காணிப்பாளரின் வீட்டில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் முத்தரசு (வயது54). இவர் திருச்சியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்தார். அவர் மீது வந்த புகார்களை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆவண காப்பக துணை கண்காணிப்பாளர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் திருச்சிக்கு வந்தார்.திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வருகிறார்.
இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திருச்சி மொராய்ஸ் சிட்டியில் உள்ள டி.எஸ்.பி. முத்தரசுவின் வீட்டில் இன்று காலை பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் 10 போலீசார் சோதனை நடத்தினார்கள். டிஎஸ்பி முத்தரசு வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.