திருச்சி ஓ பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்- போக்குவரத்து துண்டிப்பு
திருச்சி ஓ பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் தென்னூர் அண்ணாநகர், பாலக்கரை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி மாநகராட்சி பகுதி பாலக்கரையில் உள்ளது ஆழ்வார் தோப்பு. இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசிக்கும் இந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அடியில் மிகவும் பழைமையான பாலம் ஒன்று உள்ளது. சுரங்கப்பாதை போல் உள்ள இந்த பாலம் ஆங்கில எழுத்தான ஓ வடிவில் அமைக்கப்பட்டு இருப்பதால் இதற்கு ஓ பாலம் என பெயர்.
இந்த பாலத்தின் வழியாக சிறிய வேன்கள், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். தற்போது கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஓ பாலத்தின் பாதி அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக தென்னூர் அண்ணாநகர் மற்றும் தில்லைநகர் பகுதி மக்கள் குறுக்குப்பாதையாக பாலக்கரைக்கு வர முடிவதில்லை. மெயின்கார்டு கேட் மற்றும் பாலக்கரை பகுதி மக்கள் தென்னூர் பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வந்து விட்டால் ஓ பாலத்தினால் பிரச்சினை தான் தொடர்கிறது. எனவே ரெயில்வே நிர்வாகமும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.