எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்ஜோதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக சட்ட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும். அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தற்போது உள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள், கட்சி வளர்ச்சிப் பணிகள், தி,மு,க,வுக்கு எதிரான கொள்கைகள் பற்றி பேட்டி அளித்தார். தமிழக முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இதனை ஒரு வெற்றி விழா போல் கொண்டாடினார்கள்.
பொதுச் செயலாளராக அங்கீகாரம் செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி சென்னை சென்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.