திருச்சி என்.ஐ.டி. கலைவிழாவில் வெற்றியாளர்களை தேர்வு செய்த குறும்பட நடிகர்
திருச்சி என்.ஐ.டி. கலைவிழாவில் வெற்றியாளர்களை தேர்வு செய்தார் தேசிய விருது பெற்ற குறும்பட நடிகர் தாமஸ்.
திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் (என்ஐடி) பெஸ்டம்பர் திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு சார்பில் போதை பொருள் இல்லாத இந்தியா என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். இந்நிகழ்வு 3 நாட்கள் நடைபெற்றது. இதில் மைம் நடனம் (குழு, தனிநபர்) உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மைம் மூலமாக மேடையில் தங்களது நடிப்பு மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்து போட்டியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது மைம் நடிப்பின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு நடுவராக சிறப்பு அழைப்பாளராக தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் ,அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் கலந்து கொண்டு முதல் இடம் மற்றும் இரண்டாம் இடத்திற்கான வெற்றியாளர்களை தேர்வு செய்தார். இந்த மைம் போட்டியில் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி மாணவிகள் முதல் இடத்தையும், வேலூர் விஐடி கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இதுபோன்று கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான குழு மற்றும் தனிநபர் நடன போட்டிகளுக்கு நடுவராக சிறப்பு அழைப்பாளராக பஞ்சரத்னாலயா நடனம் மற்றும் இசைபள்ளியின் நிர்வாக இயக்குனர் வைதேகி சாந்தகுமார் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.
குழுவினரின் சார்பில் நடைபெற்ற நடன போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த நடன குழு மாணவர்கள் முதல் இடத்தையும் தனி நபர் நடன போட்டியில் கோவை மாவட்டம் குமரகுரு தொழில் நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவி மகாலட்சுமி முதல் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சாஸ்த்ரா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி காயத்ரி இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் விளையாட்டு பிரிவு இணைச் செயலாளரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான எழில் மணி மற்றும் திரளான மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.