ஜனவரி 10-ந்தேதி முதல் திருச்சி- புதுடெல்லிக்கு மீண்டும் நேரடி விமான சேவை
ஜனவரி 10-ந்தேதி முதல் திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு மீண்டும் நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது.;
திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேரடி விமான சேவை இயக்கப்பட்டது. இதில் பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து பெங்களூரு வழியாக புதுடெல்லிக்கு விமான சேவை இயக்கப்பட்டது. அந்த சேவையும் நிறுத்தப்பட்டு பெங்களூருக்கு மட்டும் தற்போது விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சியிலிருந்து புதுடெல்லிக்கு நேரடி விமான சேவை வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. புதுடெல்லியில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் இந்த விமானம் காலை 8.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். மீண்டும் மதியம் 2.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு புதுடெல்லி விமான நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான சேவையானது திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சியில் இருந்து கொழும்புவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் ஜனவரி 10-ந்தேதி முதல் புதிய விமான சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இயக்கப்பட இருக்கிறது. இந்த விமானம் காலை10.05 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு காலை 10.55 மணிக்கு சென்றடையும். மீண்டும் அந்த விமானம் நண்பகல் 11.55 மணிக்கு கொழும்புவில் இருந்து புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.