கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த திருச்சி மேயர் அன்பழகன்
Trichy City Corporation - பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்தார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.;
Trichy City Corporation - திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் அதன் கௌரவத் தலைவர் கண்ணன், தலைவர் திருஞானம் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் திருச்சி மாநகராட்சியில் வளர்ந்து வரும் பகுதியான ஜே.கே. நகர் விரிவாக்க பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் குறிப்பாக அனைத்து தெருக்களிலும் மின்விளக்கு அமைத்து தர வேண்டும், கடந்த மழைக்காலத்தில் கொட்டப்பட்டு குளத்து நீர் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்பாலிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் அமைத்து தர வேண்டும் ,பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மேயர் அன்பழகன் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை ஜே.கே. நகர் விரிவாக்க பகுதிக்கு வந்த மேயர் அன்பழகன் கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்த சரத்துக்கள் தொடர்பாக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.முதல் கட்டமாக அனைத்து தெருக்களிலும் உள்ள மின்கம்பங்களில் மின்கம்பங்கள் பொருத்துவதற்கும் வெளிச்சம் குறைந்த மின்விளக்குகளை அகற்றிவிட்டு வெளிச்சம் அதிகமான வழக்குகளை பொருத்துவதற்கு உத்தரவிட்டார்.
மேலும் ஜே.கே. நகர் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணி சரிவர நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் கூறியிருந்ததால் அந்த வாய்க்காலில் தூர் வாரும் பணிகளை முறையாக செய்ய வேண்டும். வாய்க்காலின் அடிப்பகுதியில் உள்ள மணல் வரை அனைத்தையும் அள்ளி வெளியே போட்டு மழை நீர் தங்கு தடை இன்றி வடிந்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுரை வழங்கினார்.மேலும் ஜே.கே. நகர் வழியாக செல்லும் மழை நீர் கொட்டப்பட்டு குளத்தில் போய் சேர்வதற்கும் வடிகால்கள் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
கொட்டப்பட்டு குளத்தை பார்வையிட்ட மேயர் அன்பழகன் அந்த குளம் வருவாய் துறை அதிகாரிகள் பராமரிப்பில் இருப்பதால் குளத்தை தூர் வாருவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து குறைகளை தீர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். மேலும் ஜே.கே. நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தரமாக அமைத்து வீடுகளுக்கு இணைப்பு வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதனை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மேயருடன் பொன்மலை கோட்ட தலைவர் துர்கா தேவி,உதவி ஆணையர் சண்முகம் ,கோட்ட உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர்.
மேயர் ஆய்வு முடித்த சிறிது நேரத்தில் மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் உடனடியாக ஜே.கே. நகருக்கு வந்து மின் விளக்குகள் பொருத்த வேண்டிய இடத்தை அளவீடு செய்து விட்டு சென்றனர் .கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கையாக நேரில் வந்து பார்வையிட்டு மின்விளக்குகள் போடுவதற்கு உத்தரவிட்ட மேயருக்கு அப் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2