திருச்சி ஜேகேநகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா

திருச்சி ஜேகேநகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-08-15 09:15 GMT

திருச்சி ஜேகேநகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மண்டலம் நான்கு, 61வது வார்டில் அமைந்துள்ளது. ஜேகேநகர். ஜேகேநகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் இன்று நாட்டின் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சுதந்திர தின விழாவிற்கு சங்கத்தின் தலைவர் ஜெ. திருஞானம் தலைமை தாங்கினார். மறைந்த மின்பொறியாளர் எஸ். கண்ணன் கொடி மேடையில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியினை சங்கத்தின் துணை தலைவரும்,  நேட்டிவ் நியூஸ் தமிழ் இணைய செய்தி தளத்தின் துணை ஆசிரியருமான ஆர் பொன்சாமி ஏற்றி மரியாதை செய்தார்.


ஆர். பொன்சாமி ஆற்றிய சுதந்திர தினவிழா சிறப்புரையில் ‘நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த, சிறைவாசம் அனுபவித்த தியாகிகள் மற்றும் முன்னோர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து அன்று அவர்கள் செய்த தியாகத்தின் காரணமாக தான் இன்று நாம் சுதந்திர காற்றை நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது. இப்படி போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டியது நமது கடமை என்றார். 

மேலும் உலகின் பல குட்டி நாடுகளுக்கு இடையே கூட மதம் மற்றும் இனம் தொடர்பாக நடந்த மோதல்கள், பெரும்போராக மாறி அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் நிம்மதி இல்லாமல் குண்டு மழை பொழிவிற்கு இடையே வாழக்கூடிய நிலையில் 134 கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இன்று வரை ஒற்றுமையாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நமது இறையாண்மை தான். இந்த சுதந்திர திருநாளில் நாம் சுதந்திரத்தை பேணி காக்க  உறுதி எடுப்போம் என்றும் கூறினார்.


இதனை தொடர்ந்து சங்க தலைவர் திருஞானம் சங்கம் சார்பில் செய்யப்பட்டு மக்கள் நல பணிகள் அதற்காக மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் பற்றிய விவரங்களையும், தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், திறப்பு விழா கண்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராத நியாயவிலைக்கடை செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சங்கத்தின் பொருளாளர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சாமுவேல் சதீஷ், இணை செயலாளர் ஜெடிக்ஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, ரெங்கராஜன்,தருமலிங்கம், மன்சூர் உசேன், பிரபாகரன், மணிமுருகன், அன்பானந்தன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளும் அதிக அளவில்  பங்கேற்றது விழாவினை சிறப்படைய செய்தது.

Tags:    

Similar News