திருச்சி ஜே.கே.நகரில் மூடப்படாத குழியால் பேருந்து சேவை பாதிப்பு

திருச்சி ஜே.கே.நகரில் குடிநீர் குழாய் சீரமைப்பிற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாததால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-18 12:14 GMT

திருச்சி ஜே.கே.நகர் நால்ரோடு சந்திப்பில் மூடப்படாத குழியால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சி 35 -வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். முழுக்க முழுக்க விரிவாக்க பகுதியான இந்த நகரில் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர், தெருவிளக்கு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உள்ளது.

தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜே.கே. நகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ஜே.கே.நகர் குடியிருப்பு வாசிகளுக்கு மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டது.

அதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்தனர். இதற்காக தோண்டப்பட்ட குழி இன்னும் ஜே.கே. நகர் நால்ரோடு பகுதியில் சரியாக மூடப்படாமல் உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் தினமும் பல வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீரங்கத்திலிருந்து விமான நிலையம் செல்லும் 88ஏ டவுன் பஸ் இந்த வழியாகத்தான் செல்கிறது. தினமும் அந்த பஸ் குழி தோண்டப்பட்ட இடத்தில் திரும்பி செல்ல மிகவும் சிரமப்பட்டதால் அதன் சேவையும் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பஸ் வசதியின்றி அவதிப்படுகிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த குழியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News