திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி இன்று காலை துவக்கம்

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணியை இன்று காலை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

Update: 2022-07-06 09:28 GMT

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் நேரு தலைமையில் இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது.

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கனவாகும். இந்நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கு திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி தமிழக முதுல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக துறை திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி ஆணை வழங்கி ரூ.350 கோடி  நிதியையும் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.


இதனை தொடர்ந்து இன்று காலை பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது. தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிராவல் மண் அடிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. அமைச்சர் நேரு கிராவல் மண் ஏற்றி வந்த லாரிக்கு பச்சை கொடி காட்டினார்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார் மற்றும் கோட்ட தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   

Tags:    

Similar News