திருச்சி ஹைவேஸ் காலனி காவேரி நகரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி காவேரி நகரில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக 75வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்கா அருகில் நடைபெற்ற விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஞானவேலு தேசியக்கொடி ஏற்றினார்.சுந்தர விநாயகர் கோயில் பொருளாளர் சுப்பிரமணியன் பாரதியார் பாடல்களை பாடினார். பள்ளி மாணவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நமது தலைவர்கள் ஆற்றிய சிறப்பான பணிகளைப் பற்றி எடுத்துக் கூறி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.
அதில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு சத்திய சோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவிகள் கோலப்போட்டியில் கலந்து கொண்டனர். ஜனனி முதல் பரிசும், தரண்யா இரண்டாம் பரிசும் பெற்றார்கள். மூன்றாவது பரிசை கலாராணி பெற்றார். பிறகு நடைபெற்ற ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். இப்போட்டிகளில் வென்றவர்களுக்கு வசந்தா, கோல போட்டியின் நடுவர், மற்றும் மூத்த பெல் அதிகாரி சாந்தகுமாரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
சுந்தர்ராஜ் நகரின் 87 வயதான மூத்த குடிமகனான நபி கான் மற்றும் 85 வயதான முன்னாள் டெபுடி கலெக்டர் எஸ்.ஆர். சத்தியவாகீஸ்வரன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் வேலைவாய்ப்புத்துறை மூத்த அதிகாரி ஹரன், ஓவிய போட்டிக்கு நடுவராக பணியாற்றினார்.