திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

திருச்சி அரசு மருத்துவமனையில் முதல் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2021-12-09 08:27 GMT

திருச்சி அரசு மருத்துவமனை (பைல் படம்)

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மாந்துறை நெருஞ்சலகுடியை சேர்ந்தவர் சிவானந்தம். லாரி டிரைவரான இவருடைய மகன் வைதீஸ்வரன் (வயது 19) சிறுநீரக கோளாறு காரணமாக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வாரம் 2 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றி டாக்டர்கள் கூறி உள்ளனர்.

வைதீஸ்வரனின் தாய் பார்வதி தனது மகனுக்கு ஒரு சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்தார். இருவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு உரிய ஒப்புதல் பெற்று கடந்த 25-ந் தேதி மருத்துவமனை முதல்வர் வனிதா, கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் சிறுநீரக அறுவை சிகிச்சை டாக்டர்கள் குழுவினரின் முயற்சியால் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இதில் சிறுநீரக தானம் கொடுத்த பார்வதி மற்றும் சிறுநீரக நோயாளி வைதீஸ்வரன் ஆகியோர் அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி நலமுடன் உள்ளனர். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவ மனையை அணுகலாம் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News