திருச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் 190 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் 190 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் ௧௯௦ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அழைத்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படிப்படையில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து உள்ளாட்சி வார்டு பகுதிகளில் எந்தெந்த இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை என்பதை அறிந்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் போர்வெல் மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை 65 வார்டுகள் உள்ளன. இதில் 35 வார்டுகளில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற வார்டுகளில் சுழற்சி அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு 190 கண்காணிப்பு கேமரா மூலம் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நாள்தோறும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் சரியான முறையில் இயங்குகிறதா என பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறேன்..திருச்சி மாவட்ட பொறுத்தவரை கண்காணிப்பு கேமராவில் எந்த இடர்பாடுகளும் கிடையாது.
திருச்சி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கால்நடைகள் மற்றும் தெரு நாய்கள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்துவதற்கான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அதற்கான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது .மேலும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்படுகிறது இல்லையென்றால் வாகனத்தின் உரிமை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.