திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்

அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-11-17 14:21 GMT

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் வாகனத்தை இயக்குகின்றனர், கடந்த சில நாட்களாக கனமழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி, சாலையில் உள்ள குண்டு, குழிகள் மறைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விடுகின்றனர். அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூட தடுமாறும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

எனவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை பா.ஜ.க.வின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் குறித்த நேரத்தில் வராமல் தங்களது அலுவலகத்திற்கு காலதாமதமாக வருவது தவறு, இவர் பொது மக்களின் பிரச்சினையை எவ்வாறு சரியான முறையில் கையாளுவார் என்று பா.ஜ.க.வினர் கோஷம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மற்றொரு அதிகாரி பா.ஜ.க.வின் மாநகர் மாவட்ட தலைவரையும், மகளிர் அணி தலைவியையும் மற்றும் அங்குள்ள மகளிரையும் ஒருமையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதனால்ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் அங்கிருந்து ஊர்வலமாக  கோஷங்கள் எழுப்பியவாறு திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தரையில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மாநகராட்சி ஆணையரிடம் சாலையை சீரமைப்பது பற்றியும், அலுவலகத்திற்கு காலதாமதமாக வந்ததுடன், அங்குள்ள அதிகாரி பாரதீய ஜனதா கட்சியினரை ஒருமையில் பேசியது தவறு என்றும் தகவல் தெரிவித்து இதற்கு  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அப்போது அதற்கும் மாநகராட்சி ஆணையரிடம் இருந்து முறையான பதில் வராததால் பா.ஜ.க.வினர் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு,  பாரதீய ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பா.ஜ.க.வின் தரப்பில் மாநகராட்சியில் இருந்து உடனடியாக சாலைகளை சரி செய்ய வேண்டும் எனவும், எங்கள் கட்சியினரை ஒருமையில் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அத்துடன் தி.மு.க, காங்கிரஸ் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள், பாரதிய ஜனதா கட்சியினர் வைத்திருக்கும் பிளக்ஸ் பேனரை மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் கிழித்து எடுப்பதற்கு காரணம் என்ன? என்று மூன்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.இதற்கு முறையான சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று கூறினர்.

போராட்டத்தின்போது பா.ஜ.க.வினர் -போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு காவல்துறையினர் தரப்பில் முறையான புகார் அளித்தால், சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் உடனடியாக பா.ஜ.க. தரப்பில் மூன்று புகார் மனுவை தயார் செய்து உரிய அதிகாரிகளிடம் கொடுத்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன்,  மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் பாலமுருகன் சிட்டிபாபு, பொதுச் செயலாளர் சங்கர், இளைஞர் அணி தலைவர் சுதாகர் என்கின்ற வெங்கடேசன், மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் பார்த்திபன், பாலன், சீனிவாசன், பாண்டியன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News