திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்- கடைகள் திறப்பு எப்போது?
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கடைகள் இன்னும் திறக்கப்படாததால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.;
திருச்சி நகரின் மைய பகுதியில் உள்ளது சத்திரம் பஸ் நிலையம். திருச்சி மாவட்டத்தின் துறையூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம்,லால்குடி, திருவெறும்பூர், துவாக்குடி, பெட்டவாத்தலை உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டும் இன்றி பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வெளியூர் பஸ்களும் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்கின்றன.
பல ஆண்டுகளாக வானத்தையே கூரையாக கொண்டு எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்த இந்த சத்திரம் பஸ் நிலையத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.17 கோடியில் சீரமைத்து மேம்படுத்த திட்டமிடப்பட்டது. கட்டுமான பணிகள் தொடங்கின. பின்னர் ஒட்டுமொத்த சீரமைப்புகள் திருச்சி ஸ்மாரட் சிட்டி தி்ட்டத்தின் கீழ் ரூ28 கோடியில் நடைபெற்றன.
ஒரே நேரத்தில் 30 பஸ்கள் நிறுத்தும் வகையில் பஸ் நிலையம் புதுப்பொலிவு பெற்றது. பயணிகளின் வசதிக்காக ஓட்டல் மற்றும் 54 கடைகளும் கட்டி முடிக்கப்பட்டன.
புதுப்பொலிவு பெற்ற இந்த சத்திரம் பஸ் நிலையத்தை கடந்த டிசம்பர் மாதம் 30ந்தேதி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியபோது கேர் கல்லூரி வளாகத்தில் இருந்தபடியே திறந்து வைத்தார்.
அதன் பின்னர் ஜனவரி 4ம் தேதி அமைச்சர் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் இந்த பஸ் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. அமைச்சர்கள் பச்சை கொடியசைத்து பஸ் நிலையத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் அனைத்து பஸ்களும் உள்ளே வந்து சென்று கொண்டிருக்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளும் உள்ளே வந்து செல்கிறார்கள். ஆனால் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்து ஒரு மாதத்தை கடந்தும் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
பயணிகளின் நலன் கருத்தி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை விரைவில் திறக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.