தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் கைது
தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட புதுகை வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுகை மாவட்டம் ஆவுடையார்கோவிலை சேர்ந்த தினேஷ் (வயது 38) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது தேடப்படும் குற்றவாளி என எல்.ஓ.சி. வழங்கப்பட் டிருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தினேசை விமான நிலைய போலீசாரிடம் இமிகிரேசன் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதில் விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த 2017-ம் ஆண்டில் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பியது தெரிய வந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு ஏர்போர்ட் போலீசார் தகவல் அளித்தனர். இதையடுத்து மாலையில் அங்கு வந்த போலீசார் தினேஷை கைது செய்து அழைத்து சென்றனர்.