திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் முறைகேடு செய்த 2 பேர் கைது
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை முறைகேடாக மாற்றி கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. விமானத்தில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் வெளிநாட்டு பணத்தை மாற்றுவதற்காக விமான நிலைய முனையத்தில் பணம் மாற்றும் நிறுவனம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வெளியேறும் பகுதிகளில் வெளிநாட்டு பணத்தை மாற்றித் தருவதாக கூறி சிலர் முறை கேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.
அதன் பேரில் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் நேற்று திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, அவரை கண்ட வெளிநாட்டு பணத்தை மாற்றும் புரோக்கர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 2 பேரை விமான நிலைய இயக்குனர் பிடித்து ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர்கள் செம்பட்டு எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 53), கே.கே.நகர் கவிபாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ரபீக் (வயது 46) என தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.