திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு

திருச்சி சர்வதேச விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

Update: 2021-10-04 10:30 GMT

திருச்சி விமான நிலைய உறுப்பினர்கள் குழு கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

திருச்சி சர்வதேச விமானநிலைய குழு உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. விமான நிலைய உறுப்பினர்கள்  குழு தலைவர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ள விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி , விமான நிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம்,சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியக சிறப்பு பணியகம், திருச்சி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பாதுகாப்பு கருதி அடிப்படை தேவைகள் மற்றும் தொழிநுட்ப விபரக்குறிப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை, விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரம் ட்ரோன் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்பது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட விபத்துக்கள் போன்று எவ்வித விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் ட்ரோன் கண்காணிப்பு தொழில் நுட்பத்தை தக்க உபகரணங்களுடன் எதிர்கொள்வது, விமான நிலைய விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் அம்பேத்கர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியினை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், குடிசை மாற்று வாரியம் மூலமாக உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும், தேசிய நெடுஞ்சாலை எண் 210 விமான ஓடுதளத்தின் அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி தரைவழிப்பாலம் அல்லது சாலையின் உயரத்தை குறைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விமான கடத்தல் ஒத்திகையின்போது தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களையும் வைத்து ஒத்திகை செய்வது என்றும், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி  சி.சி.டி.வி .அதிகமாக வெளிப்பகுதிகளில் அமைத்தால் கடத்தல் செய்பவருக்கும், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவரையும் எளிதில் கண்காணித்து கடத்தலை தடுக்க முடியும் என்று வெளியே வாகன நிறுத்துமிடங்களில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொன்மலை உதவி ஆணையர் விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும்,  குடியிருப்பு பகுதிகளில் வெளியாட்கள் எவரேனும் தங்கியுள்ளார்களா? என்று சோதனை செய்தும், டிரோன் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும், விமான நிலையத்தின் நுழைவுவாயில் மற்றும் வெளியே செல்லும் பகுதியில் காவலர் சாவடி அமைப்பது பற்றியும் விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News