திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைத்திருந்த தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் யாரும் தங்கம் கடத்தியதாக பிடிபடவில்லை.
இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பிரபாகரன் (வயது 34) என்பவர் கழிவறையில் இருந்து வந்துள்ளார். அப்போது, அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனது உடலில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும், அந்த தங்கத்தை கழிவறையில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து விமான நிலைய கழிவறையில் இருந்த 724.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.35 லட்சத்து 79 ஆயிரம் என்று கூறப்படுகறது.