திருச்சி: கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் ,பாஸ்கர். நண்பர்களான இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2019ஆம் ஆண்டு திடீரென பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஸ்கர் கோர்ட்டில் அபராதம் செலுத்தினார்.
இதிலிருந்து அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதரின் நண்பர் கணேசன் என்பவர் திடீரென பாஸ்கருக்கு போன் செய்து என்னடா மீண்டும் நீ பாஸ்கரிடம் பிரச்சினை செய்கிறாயா? எனக்கேட்டுள்ளார். இதற்கு பாஸ்கர் நீ எங்கேடா இருக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது கணேசன் நானும்,ஸ்ரீதரும் அரியமங்கலம் அம்பிகா நகரில் தான் இருக்கிறோம் முடிந்தால் வந்து பார் என கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் உடனடியாக அங்கு சென்று ஸ்ரீதரையும் கணேசனையும் கத்தியால் குத்தி உள்ளார். இது தொடர்பாக அரியமங்கலம் போலீசார் பாஸ்கர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார் .இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.