திருச்சி 11-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் வெற்றியை எதிர்த்து வழக்கு
திருச்சி11-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் வெற்றியை எதிர்த்து வழக்கு;
திருச்சி மாநகராட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திருச்சி மாநகராட்சியின் 11-வது வார்டில் அ.தி.மு.க .சார்பில் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான வனிதாவும், தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் விஜயா ஜெயராஜும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் விஜயா ஜெயராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வனிதா தனது வழக்கறிஞர் மூலம் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுபவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அரசு ஒப்பந்ததாரர் ஆக இருக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. விஜயாவின் கணவர் ஜெயராஜ் திருச்சி மாநகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் ஆக உள்ளார். இதனை தனது பிரமாண பத்திரத்தில் விஜயாஜெயராஜ் மறைத்து வேட்புமனு தாக்கல் செய்ததோடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆதலால் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
அவருக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரி அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி கே. பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.